Monday, March 28, 2016

கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்தார்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றது எனவும் அந்த அனைத்து குற்றங்களையும் மஹிந்த ராஜபக்ஸ தனித்து செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த கால அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அப்போதைய அமைச்சரவையில் அங்கம் வகித்த மைத்திரிபால சிறிசேனவும்அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி அந்தப் பொறுப்பிலிருந்து தப்பிக்கொள்ள முடியாது எனவும், எதிர்க்கட்சியை மேடைகளில் ஏறி திட்டுவதனை நிறுத்திவிட்டு நாட்டுக்கு மக்களுக்கு சேவையாற்றுமாறு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் விவசாயிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள எம்மவர்களும் விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மருந்து பொருட்கள் இன்றி தனியார் மருந்தகங்களில் மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு நோயாளிகள் பணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.