Wednesday, September 30, 2015

சந்திரிகாவை கொல்ல முயன்ற வழக்கில் 2 பேருக்கு 290 மற்றும் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Wednesday, September 30, 2015
இலங்கையில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை கொலை செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் 2 பேருக்கு 290 மற்றும் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 1999ம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது புலிகளின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், சந்திரிகாவின் பாதுகாவலர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். சந்திரிகாவின் ஒரு கண் பறிபோனது. அவர் உள்பட 80 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உதவியதாக வேலாயுதம் வரதராஜா, சந்திரா ரகுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், அவர்கள் தாக்குதலுக்கு உதவி செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், வேலாயுதத்தற்கு 290 ஆண்டுகளும், சந்திரா ரகுபதிக்கு 300 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.

இவ்வழக்கில் ஏற்கனவே ஒருவருக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா அமைதிகாக்கும் பணி: இலங்கை தொடர்ந்து அர்ப்பணிக்கும்: மைத்தி!

 Wednesday, September 30, 2015
ஐ. நா அமைதிக்காக்கும் பணிக்கு தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை மகிழ்ச்சியடைகிறது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

ஐ. நா அமைதிகாக்கும் படையின் காரணமாக இன்று உலகம் பாதுகாப்பாக உள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களில் இப்பணியில் இருந்தபோது தங்களது உயிர்களைத் தியாகம் செய்த நூற்றுக்கனக்கான அமைதிகாக்கும் பணியாளர்களை நினைவுகூர்ந்து நாம் இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைச் செலுத்துவதோடு, அவர்களது பணிகளை அங்கிகரித்து பாராட்டுவோம் என்றும் தெரிவித்தார்.

ஐ. நா தலைமையகத்தில்  நடைபெற்ற ஐ. நா அமைதிகாக்கும் பணிகள் தொடர்பான உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஐந்து தசாப்தங்களாக ஐ.நா அமைதிகாக்கும் முயற்சிகளுக்கு இலங்கை தன்னடக்கமான பங்களிப்புகளைச் செய்துவந்துள்ளது. ஐ நா அமைதிகாக்கும் திணைக்களத்தின் நடவடிக்கைகளில் இலங்கையின் ஒத்துழைப்பை இவ்வருடம் ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத்; தொடர்ந்து ஐ.நா உடனான உடன்பாடான ஈடுபாட்டிற்கான அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு விரிவாக்கமாகவே கருதுகிறோம் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

அமைதி நடவடிக்கைகள் தொடர்பான உயர்மட்ட குழுவின் அறிக்கை சிவிலியன்களின் பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முக்கிய கடப்பாடாக அடையாளப்படுத்துகிறது. ஐ.நா அமைதிகாக்கும் பணியாளர்கள் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குக் கிடைக்கும் எல்லா கருவிகளையும் பயன்படுத்த வேண்டுமென அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கையில் சிவிலியன்களைப் பாதுகாப்பது தொடர்பான கிகாலி கோட்பாடுகளை இலங்கை அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த முன்னெடுப்பில் மேலும் பல நாடுகள் இணைந்து கொள்ளுமென நாம் எதிர்பார்க்கிறோம். என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாடு அமைதிகாக்கும் பணிகள் அதன் ஆணையை மிகச் சரியாக நிறைவேற்றும் வகையில் அதற்குத் தேவையான மேலும் பல வளங்களை வழங்குவன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்துமென நாம் எதிர்பார்க்கிறோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்...
 
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாராட்டியுள்ளார். இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் போன்றன தொடாபில் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது என ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக நியூயோர்க் விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதியை, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அரச தலைவர்களுக்கு வழங்கிய விருந்துபசாரத்தில் சந்தித்த போது ஒபாமா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு பூரண ஒத்துழபை;பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பில் சீர்திருத்தம்!

Wednesday, September 30, 2015
அடுத்த தேர்தலுக்குள் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பிலான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் திணைக்களத்தின் அறுபதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் சட்ட வரையறைக்கு அமையவே நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடல்கள் முன் எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடு நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவானதாகவே இருக்கும் என அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய முகாமைத்துவ நிறுவனம் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
சகல தரப்பினருடனும் கலந்துரையாடியதன் பின்னரே நாட்டுக்கே உரித்தான நடவடிக்கைகளின் ஊடாக நல்லாட்சியை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பற்றிய யோசனை குறித்து உறுப்பு நாடுகள் கருத்து!

Wednesday, September 30, 2015
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு யோசனைகள் தொடர்பில் இன்றைய தினம், உறுப்பு நாடுகள் தமது கருத்துக்களை வெளியிடவுள்ளன.

இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கும் 3.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த அமர்வு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல இணைந்து யோசனை ஒன்றை முன்வைத்துள்ளன.

இந்த யோசனைக்கு இலங்கை தற்போதைய நிலையில் தமது ஆதரவினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழக அரசிற்கு 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன்!

Wednesday, September 30, 2015
சென்னை:'தேர்தல் அறிக்கையில் கூறியதை, நிறைவேற்றவில்லை' என, தி.மு.க., குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக, சட்டசபை யில், நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - சக்கரபாணி:
 
காவிரியில் தண்ணீர் விட, கர்நாடகா அரசு மறுப்பதை கண்டித்து, டெல்டா விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடகா முதல்வர், அனைத்துக் கட்சியினரையும் டில்லி அழைத்துச் சென்று, பிரதமரை சந்தித்து, வறட்சி நிவாரணம் கோரியுள்ளார். தமிழக முதல்வரும், அதேபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் பன்னீர்செல்வம்:
 
 காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், சுமுக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சக்கரபாணி: எங்கள் கட்சியை சேர்ந்த, ஸ்டாலின், அன்பழகன் ஆகியோரின் தொகுதிகளில், மூன்று ஆண்டுகளாக, தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் நடக்கவில்லை.

அமைச்சர் வேலுமணி:
 
 பரிந்துரை செய்ததில், தாமதம் ஏற்பட்டிருக்கலாம். பரிந்துரை செய்த பணிக்கு, இடம் கிடைக்காமல் இருக்கலாம். எந்த திட்டம்; என்ன பணி என கூறினால் நடவடிக்கை
எடுக்கப்படும்.

சக்கரபாணி:
 
ஒவ்வொருவருக்கும், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தீர்கள்; இன்னமும் வழங்கவில்லை. என் தொகுதியில், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு ஒரு முறைதான், குடிநீர் கிடைக்கிறது. மூத்த குடிமக்களுக்கு, இலவச பஸ் பாஸ் தரப்படும் என்று கூறினீர்கள்; இன்னும் வழங்கவில்லை. அரசின் கடன்சுமையை குறைத்து, தமிழர்களை தலை நிமிர செய்வோம் என்றீர்கள். ஆனால், கடன், 4 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

அமைச்சர் பன்னீர்செல்வம்:
 
தமிழக அரசு வாங்கியுள்ள கடன், மூலதனத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. மேலும், 4 லட்சம் கோடி கடன் என்பது தவறு. பொதுத் துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து, மொத்தம், 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதுவும், 14வது நிதிக்குழு ஆணையம் நிர்ணயித்த வரையறைக்குள் இருக்கிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

பூமியை விட்டால் வேறு இடம்: வணக்கம் 'செவ்வாய்'!!!

Wednesday, September 30, 2015
பூமியை விட்டால் வேறு இடம் இல்லாமல் தவித்த மனிதர்களை வரவேற்க, இப்போது செவ்வாய் கிரகம் தயாராக இருக்கிறது. இங்கு தண்ணீர் இருப்பதை 'நாசா' உறுதி செய்துள்ள நிலையில், நாம் செவ்வாயில் குடியேறும் நாள் வெகுதுாரத்தில் இல்லை.

சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. சில நாடுகள் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பி உள்ளன. இந்தியா சார்பில் 'மங்கள்யான்' அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா', செவ்வாய் கிரகம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2006ல் 'மார்ஸ் ரெகோனாய்சன்ஸ் ஆர்பிட்டர்' (எம்.ஆர்.ஓ.,) என்ற விண்கலம் ஏவப்பட்டது. இதில் பொருத்தப்பட்ட 'இமேஜிங் ஸ்பெக்டோ மீட்டர்' எடுத்த புகைப்படத்தில் நீர் ஓடுவதற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது. 'செவ்வாயில் நீர் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது' என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.     
 
பள்ளத்தாக்குகளில் நீர் ஓடுவது போன்ற புகைப்படங்கள் கிடைத்துள்ளன. படத்தில் காணப்படும் விரல் தடம் போன்ற அமைப்பு தான் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரம் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நீர் எங்கிருந்து வருகிறது என்பதை விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கமுடியவில்லை. 'நிலத்தடி நீர் அல்லது பனிக்கட்டிகள் உருகுவதால் நீர் ஓடலாம்' என்கின்றனர். அதாவது செவ்வாய் கிரகத்தில் கோடை காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்து காணப்படுகிறது என்றும் உறைந்த தண்ணீரின் அடியில் உப்புப்படிவங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.  

 
யார் இந்த லுஜேந்திர ஓஜா:
 
செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆய்வில் ஈடுபட்ட 'நாசா' விஞ்ஞானிகளின் வழி காட்டியவர் லுஜேந்திர ஓஜா. இவர் தற்போது அமெரிக்காவின் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 'கோள் அறிவியல்' துறையில் பி.எச்டி., படிக்கிறார். இவர் முதலில் நிலநடுக்கம் தொடர்பான துறையில் கவனம் செலுத்தி வந்தார். பின் பூமி, செவ்வாய், நிலவு தொடர்பான ஆய்வில் ஈர்க்கப்பட்டு 2012ல் பி.எஸ்சி., (ஜியோ இயற்பியல் வித் கோள் அறிவியல்) படிப்பை அரிஜோனா பல்லைக்கழகத்தில் முடித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் ஒரு நேபாளி. குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆய்வில் ஈடுபட்ட நாசா விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பிரட் மெக்வென் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அப்போது எம்.ஆர்.ஓ., எனப்படும் 'மார்ஸ் ரெகனைஸ்சன்ஸ் ஆர்பிட்டர்' என்பதை ஆராய்ச்சி செய்த போது, தற்செயலாக செவ்வாய் கிரகத்தின் பரப்பளவில் தண்ணீர் உறை நிலையில் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.

புதிய முறையில் ஆய்வு செய்தால் இதை உறுதிப்படுத்தாலம் என நாசா விஞ்ஞானிகளிடமும் கூறினார். மேலும் செவ்வாயில் ஆர்.எஸ்.எல்., (ரெகரிங் ஸ்லாப் லீனேஜ்) எனும் செவ்வாயில் நீர் வழிந்தோடியதற்கான தடத்தை கண்டுபிடித்தார். அது நிச்சயம் தண்ணீராகத்தான் இருக்கும். உப்புப் படிவும் போல இது தென்படுகிறது என்று தெரிவித்தார். 2011ம் ஆண்டு ஆல்பரட் மெக்வெனும், இவரும் சேர்ந்து இதனை அறிவித்தனர். இதையடுத்தே அதுகுறித்த ஆய்வுகளை நாசா தீவிரப்படுத்தியது. அறிவியல் ஆய்வுகளில் அசாத்திய திறனுடன் ஈடுபடும் இவர், இதற்கு முன் கிடார் வாசிப்பில் கைதேர்ந்தவராக இருந்தார்.                  

ஆய்வு பணிகள்:

* 2008: அரிஜோனா பல்கலையின் இயற்பியல் மற்றும் வளிமண்டல் அறிவியல் துறை, உயிர் அறிவியல் துறை
* 2009 : தெற்கு கலிபோர்னியா நிலநடுக்க மையம்
* 2010 -11 : லூனார் மற்றும் கோள் ஆய்வகம், அரிஜோனா பல்கலை
* 2010 - 12 : லூனார் ரெகனைஸ்சன்ஸ் ஆர்பிட்டர் மற்றும் லூனார் மேப்பிங் மற்றும் மாடலிங் புராஜக்ட்
* 2011 - 12 : கோள் அறிவியல் இன்ஸ்டிடியூட் (பி.எஸ்.ஐ.,)
* 2013 ஜூன் - ஆக., : ஜெட் புரோபல்சன் லெபாரட்டரி   

 

'கூகுள்' பாராட்டு:
 

செவ்வாயில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதி செய்தது. இதையடுத்து கூகுள் தனது தேடல் பக்கத்தில் சிறப்பு "டூடுள்' போட்டு கொண்டாடியது. கூகுள் முகப்பு பக்கத்தின் நடுவில் உள்ள "ஓ' என்ற எழுத்தை செவ்வாய் போன்று வடிவமைத்தது. அது சுற்றி வரும் போது ஒரு கார்ட்டூன் உருவம் டம்ளரில் தண்ணீரை வைத்து "ஸ்ட்ரா' போட்டு உறிஞ்சுவது போன்று காட்டப்பட்டது. அந்த படத்தின் மீது "மவுஸை' வைத்தால் "செவ்வாயில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்ற வாசகம் வரும். அதை "கிளிக்' செய்தால் "மார்ஸ்' என்ற சொல்லின் தேடல் பக்கத்துக்கு செல்கிறது.     


"நெட்டிசன்'கள் கிண்டல்:
 

எந்தவொரு விஷயத்தையும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வதை "நெட்டிசன்'கள் வழக்கமாக கொண்டுள்ளனர். செவ்வாயில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் கிண்டல் செய்து பதிவுகள் போட்டு வருகின்றனர்.காவேரி டெல்டா பாசனத்துக்கு செவ்வாயிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும், பூமியில் உள்ள நீரை முதலில் கண்டுபிடியுங்கள் பின் செவ்வாய்க்கு செல்லலாம் என்றும் பலவிதங்களில் கலாய்த்து வருகின்றனர்.

உள்நாட்டு விசாரணை நடத்தஇலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு!

Wednesday, September 30, 2015
நியூயார்க், :இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, உள்நாட்டு விசாரணை நடத்த ஆதரவளிப்பதாக, இலங்கை அரசிடம், அமெரிக்கா கூறியுள்ளது.
 
கடந்த வாரம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்தின், ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைக் குழு கூட்டம் நடந்தது. அப்போது, 'இலங்கை உள்நாட்டு போரில் நிகழ்ந்த, மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை, இலங்கை அரசு தெரிவு செய்யும், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் பங்கேற்புடன், விசாரிக்க வேண்டும்' என, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
 
இதற்கு மாறாக, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென, ஐ.நா., மனித உரிமைகள் குழு தலைவர் ஸீத் ராட் அல் ஹுசேன் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
 
இதையடுத்து, உள்நாட்டு விசாரணை நடத்தும் வகையில், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற, இலங்கை அரசு, முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில், ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேன, இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியை, நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசு, ஜனநாயக சுதந்திரத்தை மீண்டும் ஏற்படுத்தும் வகையில், துணிச்சலுடன் எடுத்து வரும் நடவடிக்கைகளை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பாராட்டினார். இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நீதி கிடைக்க, உள்நாட்டு விசாரணை மேற்கொள்வதற்கு, அமெரிக்கா ஆதரவளிக்கும் என, கெர்ரி உறுதியளித்தார்.இவ்வாறு ஜான் கிர்பி கூறினார்.

ஜெனிவா தீர்மானம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோருகிறார்: விமல் வீரவன்ச!

Wednesday, September 30, 2015
ஐ.நா. மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு முன்பாக பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.  நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
 
குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு உள்நாட்டு கட்டமைப்பொன்றை உருவாக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளது பொய். உண்மையில், சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவொன்றின் மூலமே சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படவுள்ளது. இந்த விசாரணை இலங்கை அரசியல் சாசனத்தை மீறும் ஒரு செயல. ஐ.நா. மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு முன்னர் இது குறித்து, மக்களின் அனுமதியை பெறுவதற்கு பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்படுவது அவசியமென்று அவர் கூறினார்.
 
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ குணவர்த்தன, அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் மூலம் இலங்கையின் சுதந்திரம் பறிக்கப்படுமென்று குற்றம்சாட்டினார். இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் அவகாசம் இருக்கின்ற நிலையில், அமெரிக்க தீர்மானத்திற்கு அரசு ஆதரவு தெரிவித்துள்ளது ஏற்கமுடியாததென்று புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார்.

Tuesday, September 29, 2015

இலங்கையின் நீதித்துறை மறுசீரமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு அமெரிக்கா 363 கோடி ரூபா நிதியுதவி!

Tuesday, September 29, 2015
இலங்கையின் நீதித்துறை மறுசீரமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு அமெரிக்கா 363 கோடி ரூபா நிதியுதவி அளித்துள்ளது.
இன்று காலை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடந்த வைபவமொன்றில் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதுடன், நீதித்துறை மேம்பாடு மற்றும் நீதித்துறை சுயாதிபத்தியத்தை பாதுகாத்தல் தொடர்பான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான ஒப்பந்தமொன்றில் அமெரிக்காவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன.
வெளிவிவகாரத்துறை பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் தொழில்நுட்ப மேம்பாடுகளை மேற்கொள்ள இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என்று வைபவத்தின் பின்னர் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

வித்தியா கொலை: 9 சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

Tuesday, September 29, 2015
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 9 சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
மாணவியின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணு மற்றும் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் தொடர்பிலான மரபணு பரிசோதனை அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.
இந்த மாதிரிகளை பொறுப்பேற்றதாக ஜின்டெக் நிறுவனம் வழங்கிய அறிக்கையொன்றும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதவான் வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
அதுவரை சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஐ.நா செயலாளர் நாயகம் வழங்கிய விருந்துபசாரத்தில்: மைத்திரி!

Tuesday, September 29, 2015
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தை முன்னிட்டு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வழங்கிய விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விசேட வரவேற்புகிடைத்துள்ளது.
இந்த விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டீன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மேலும் சில அரச தலைவர்களுடன் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி உலகத் தலைவர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
 
ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொது சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரை நிகழ்த்தள்ளார்.
நியூயோர்க் நேரப்படி நாளை (30) காலை 9.45 க்கு ஜனாதிபதி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த பின்னர் ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்,
கடந்த 25 ஆம் திகதி நியூயோர்க்கில் ஆரம்பமான ஐ.நா பொதுச்சபை கூட்டத் தொடரின் இம் முறை தொனிப்பொருளாக சமாதானம் , பாதுகாப்பு மற்றும் எதிர்கால பொருளாதார நோக்கு காணப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சர்வதேச அரச தலைவர்கள் பலரும் பொதுச்சபையில் உரை நிகழ்த்த உள்ளனர்.
ஜனாதிபதி ஏற்கனவே ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் , அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி , இந்திய பிரதமர் நரேந்திர மோடி , பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் , சுவிஸர்லாந்து ஜனாதிபதி டிடயர் பர்கால்டர் , தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜெகோப் சுமா உள்ளிட்ட அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர , நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ , மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநான் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் ஜனாதிபதியுடன் ஐ.நா பொதுச்சபை கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 2 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.

இலங்கை பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு: பான்-கி-மூன்!

Tuesday, September 29, 2015
உள்நாட்டு அரசியல் பிரச்னைகளுக்கு பேச்சு மூலம் சுமுக தீர்வு காண வேண்டும்' என, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன், இலங்கை அதிபர் சிறிசேனவிடம்,
வலியுறுத்தியுள்ளார்.
 
ஐ.நா., 70ம் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்க, நியூயார்க் வந்த, சிறிசேன, பான்-கி-மூனை சந்தித்து பேசினார். அப்போது, பான்-கி-மூன் பேசியது குறித்து, அவரது செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
 
இலங்கையில், சுமுக அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சை முன்னெடுத்துச் செல்ல இதுவே சரியான தருணம். இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி, இலங்கையில் நிலையான, நீடித்த அமைதிக்கு அடித்தளம் இட வேண்டும். ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அரசு நேர்மறையான, திடமான நடவடிக்கையைத் துவக்கியுள்ளது.

இது வரவேற்கத்தக்கது. அதேபோல், ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை, இலங்கை அரசு நிறைவேற்றும் என, ஐ.நா., நம்புகிறது. இது தொடர்பாக, இலங்கை அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க, ஐ.நா., தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் செயல்கள் மனிதாபிமானத்திற்கு இழுக்கு: ஒபாமா!

Tuesday, September 29, 2015
ஒரு பயங்கரவாத அமைப்பு, பிணைக்கைதிகளை கொல்வதும், பெண்களை துன்பப்படுத்தவதும் மனிதாபிமானத்திற்கு ஏற்பட்ட இழுக்கு எனவும், உலகத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை தங்களால் மட்டும் சரி செய்ய முடியாது என அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா., பொதுச்சபையில் பேசினார்

அவர் பேசியதாவது: ஐ.நா., பொதுச்சபையில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது: உலகத்தின் பிரச்னையை அமெரிக்காவால் மட்டும் தீர்க்க முடியாது.அமெரிக்காவையும், நட்பு நாடுகளையும் காப்பாற்ற தயங்க மாட்டோம்.ஐ.நா.,வின் செயல்பாடு சாதிக்க முடியாதது என நினைக்கின்றனர். தூதரகம் மற்றும் பேச்சுவார்த்தை ரீதியிலான அமைதி நடவடிக்கை சாத்தியமாகாது என சிலர் வாதாடுகின்றனர்.
ஐ.எஸ்., மீது சாடல்:
 
உலகில் சில பயங்கரவாத அமைப்புகள் நம்மை பின் தள்ளுகின்றன. பயங்கரவாத அமைப்புக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும். ஒரு பயங்கரவாத அமைப்பு பிணைக்கைதிகளை கொல்வதும், பெண்களை கொடுமைப்படுத்துவதும் மனிதாபிமானத்திற்கு இழுக்கு. சிரியாவில் சர்வாதிகாரி சொந்த மக்களையே கொடுமைப்படுத்துகிறார். இது நம்மை பாதிக்கிறது.உங்கள் எதிரிகளை சிறையிடலாம், சிந்தனைகளை தடுக்க முடியாது.இன்றைய சர்வாதிகாரிகள், நாளை புரட்சி ஏற்படுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கின்றனர்.சிரியாவில் உள்ள பிரச்னையை தீர்க்க ரஷ்யா ஈரான் மற்றும் மற்ற நாடுகளுடன் பேச தயார்.ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போர் ஐநாவின் நோக்கமாக இருக்க வேண்டும். சாமான்ய மக்களின் பாதுகாப்பு சிலரின் நடவடிக்கை மற்றும் கொள்கைகளால் பாதிக்கப்படுகிறது.
சர்வதேச சமூகத்தின் சாதனை:
 
ஈரான் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை பார்க்கவே தடை விதிக்கப்பட்டது. ஒரு ஈரான் தொடர்பான திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சர்வதேச சமூகத்தின் சாதனையாக பார்க்கப்படும்.நாட்டின் சாதனை, அந்நாட்டு மக்களின் வளர்ச்சி அடிப்படையில் தான் பார்க்கப்படும்.
சீனாவுக்கு அறிவுரை:
 
தென் சீன கடல் பிரச்னையை சீனா, மற்றும் அதனை சார்ந்த நாடுகள் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்.சீனா சர்வதேச விதிகளை மதிக்க வேண்டும் என கூறினார்.
பனிப்போரை விரும்பவில்லை:
 
ரஷ்யாவை தனிமைப்படுத்த விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்.ரஷ்யா மீதான தடை அந்த நாட்டை தண்டிப்பதற்கு அல்ல. உக்ரைன் பிரச்னையை தீர்க்கவே. அமெரிக்கா - ரஷ்யா இடையே பனிப்போர் துவங்கியுள்ளதாக கூறுவது தவறு.பினிப்போர் துவங்குவதை விரும்பவில்லை. உக்ரைன் பிரச்னையை தீர்க்க விரும்புகிறோம்.உக்ரைன் மக்கள் ஐரோப்பாவுடன் இணைந்து இருக்கவே விரும்புகின்றனர்.ரஷ்யாவுடன் அல்ல என கூறினார்.

Monday, September 28, 2015

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் - பாதாள குழுக்களிடையே மோதலா?

Monday, September 28, 2015
மினுவான்கொடை கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த இவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலே சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

அத்துடன் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கானவர் துப்பாக்கியை வைத்திருத்தல், கப்பம் கோருதல் உள்ளிட்ட குற்றங்கள் பலவற்றுடன் தொடர்புடையவர் என பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
- அபகஹவத்தை சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஐ.எஸ். செயற்பாடுகளை கட்டுப்படுத்த பிராந்திய ஒத்துழைப்பு அவசியம்: புட்டின்!

Monday, September 28, 2015
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்பு கட்டமைப்பு ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இதன்போது. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஷாட்டுக்கு, புட்டின் தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

மேற்குலக நாடுகளும், சிரியாவின் எதிர்கட்சிகளும் ஜனாதிபதி அஷாட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்ற நிலையில் புட்டின் இந்த ஆதவை தெரிவித்துள்ளார்.

நியுயோக்கில் ஐக்கிய நாடுகள் சபை பேரவைக் கூட்டம் நாளை முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், உலக தலைவர்களின் ஒன்று கூடலின் போது சிரிய பிரச்சினை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஜனாதிபதி புட்டின், அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமாவுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மற்றும் இந்திய படையினர் இணைந்து 14 நாட்களுக்கான கூட்டுப் பயிற்சி!

Monday, September 28, 2015
இலங்கை மற்றும் இந்திய படையினர் இணைந்து 14 நாட்களுக்கான கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியாவின் பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தீவிரவாத ஒழிப்பு தொடர்பான இந்த பயிற்சிகள் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ தொடர்புகளை விரிவுப் படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூனேயில் எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த பயிற்சிகளுக்கு மித்ரசக்தி பயிற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகள்!

Monday, September 28, 2015
இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த மாகாணங்களில் 1லட்சத்து 37 ஆயிரத்து 529 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளன.

அவற்றுள் 46 ஆயிரம் வீடுகள் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படும் வீடுகளின் நிர்மாணங்கள் அடுத்த வருட முற்பகுதியில் நிறைவு செய்யப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வாரப் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நியுயோர்க்கில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

 

புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடரும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய!

jathika-hela-Urumaya
Monday, September 28, 2015
புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடரும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் பல்வேறு செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புனர்வாழ்வு அளிக்கப்படாது புலிச் செயற்பாடுகளில் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.
    
இவ்வாறு வழக்குத் தொடரும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்டத்தரணிகள் குழுவொன்று தகவல்களை திரட்ட ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோல தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.

இதன்படி, புனவாழ்வு அளிக்கப்பட்ட 12000 பேர், குமரன் பத்மநாதன், ராம், நகுலன் உள்ளிட்ட உயிருடன் வாழும் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அனைவருக்கு எதிராகவும் வழக்குத் தொடர ஜாதிக ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டமை, பொதுமக்களின் உயிர்களை பணயமாக வைத்தல், பலந்தமான அடிப்படையில் சிவிலியன்களை படையில் இணைத்தல், அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி அல்லது குண்டுத் தாக்குதல் நடத்தி கொலை செய்தல், சிறுவர் போராளிகளை படையில் இணைத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுடன் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக அவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு இங்கிலாந்து வரவேற்பு!

Monday, September 28, 2015
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் (UNHRC) சமர்ப்பிக்கப் பட்ட தீர்மான வரைவு தொடர்பில் இலங்கை அரசு எடுத்த நிலைப்பாட்டை இங்கிலாந்து வரவேற்றுள்ளது. இலங்கையின் ஒத்துழைப்பானது மோதல் மரபிலிருந்து சுமூக பேச்சுக்கான புதியதொரு நெருக்கமான படி என இங்கிலாந்தின் பொது நலவாய மற்றும் வெளிநாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வைர் தெரிவித்தார்.
 
இவ்வார ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட பின் மூல உரையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திருத்தங்களுடன் இலங்கை மீதான தீர்மான வரைவு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் (UNHRC) கூட்டத்தில் நேற்று (செப்டம்பர், 26) சமர்ப்பிக்கப்பட்டது.

மாசிடோனியா முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசு, மொண்டிநீக்ரோ, ஐக்கிய ராச்சியம் மற்றும் வட அயர்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் இணை அனுசரணையுடன் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை பேரவையின் 30வது அமர்வில் இத்தீர்மானம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் தீர்வு காண ஜனாதிபதி சிறிசேனாவிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன் வலியுறுத்தல்!

Monday, September 28, 2015
இலங்கையில் அமைதி காண்பதற்கும் அரசியல் தீர்வு காண்தற்கும் பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று இலங்கை ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனாவிடம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின்  மனித உரிமை ஆணையம் இலங்கை போர் நிறுத்த விதி மீறலை மேற் கொண்டது தொடர்பாக அறிக் கை வெளியிட்டது. அந்த அறிக் கையின் பரிந்துரைப்படி உரிய நடவடிக் கை எடுங்கள் என்று இலங்கை ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனாவிடம் ஐக்கிய நாடுகள்  பொதுச்செயலாளர் பான் கி-மூன் தெரிவித்தார்.
 
இலங்கை ஜனாதிபதியை பான் கி-மூன் சனிக்கிழமையன்று சந்தித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த மேம்பாடு இலக்கு குறித்த  கூட்டத்திற்கு இடையே பான் கி-மூன் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் இலங்கை போர் விதி மீறல் குறித்து அறிக் கை வெளியிட்ட ஆணையரையும் பான்கி-மூன் பாராட்டினார்.இலங்கை ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனா செயல்படுத்துவார் என்றும் பான்கி மூன் நம்பிக் கை தெரிவித்தார்.
 
இலங்கையில் கடந்த 2002ம்ஆண்டு முதல் 2011ம்ஆண்டு வரை கடுமையானபோர் நிறுத்த விதிமுறைகள் மீறப்பட்டு இருக்கின்றன-இது குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் சையத் ராட் அல் ஹூசைன் கூறுகையில் இலங்கையில்நடந்த உள்நாட்டுப்போரில் கடுமையான போர்நிறுத்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன.அந்தபோரின் போது கண்மூடித்தனமாக குண்டு வீசப்பட்டு விதிமுறைகள் மீறப்பட்டு இருக்கின்றன. இலங்கை போர் நிறுத்த விதி முறைகள் காரணமாக எல்.டி.டிஇயினருக்கும் இலங்கை அரசு இடையேயும் கடுமையான போர் நிறுத்த விதிமுறைகள் மீறப்பட்டு இருக்கின்றன. என்று தெரிவித்தார்.

ஹஜ் கூட்டநெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 29-ஆக உயர்வு!

Monday, September 28, 2015
சவுதி அரேபியாவின் மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மினா நகரில் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் கடந்த வாரம் கலந்து கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 769 ஆக ஆகியுள்ளது. இந்த விபத்தில் 934 பேர் காயம் அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை நேற்று29 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம்வரை பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 22 ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது பலியான 7 இந்தியர்களின் விபரம் தெரிய வந்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூருல் ஹக், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அன்வர் ஜான்ஹா, கேரளாவைச் சேர்ந்த எப்.ஏ. முனீர் வீட்டில், ஆமீனா பீவி, அப்துல் ரஹ்மான் அசரிதோடி, பி.வி. குன்ஹிமோன், மொயுத்தீன் அப்துல் காதர் ஆகியோர் தான் அந்த 7 பேர் ஆவர்.
 
கடந்த 25 ஆண்டுகளில் மினா நகரில் கூட்ட நெரிசலில் அதிகமானோர் பலியாகியுள்ளது தற்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது. பலியானவர்களில் 18 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.முன்னதாக கடந்த 11ம் தேதி மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் கிரேன் முறிந்து விழுந்து 11 இந்தியர்கள் உள்பட சுமார் 100 பேர் பலியாகினர்.

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்க உள்ளது!

Monday, September 28, 2015
இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்க உள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமை விவகாரங்களை மேம்படுத்தல் ஆகியனவற்றை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச தீர்மானத்திற்கு அதவரளிக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிவித்துள்ளதாகவும் இந்த விடயம் குறித்து அவுஸ்திரேலியா கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பகமான சுயாதீன உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஊடாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்கள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் காட்டும் முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் பொறிமுறைம நிறுவப்பட்டால் மெய்யான நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஆபத்தான வகையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: மஹிந்த ராஜபக்ஸ!

Monday, September 28, 2015
இலங்கைக்கு ஆபத்தான வகையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உத்தேச தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பிலான தீர்மானத்தில் தீங்கான விடயங்கள் காணப்படுவதாகவும் அவை நீக்கப்பட வேண்டுமெனவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டுக்கு சாதகமான அடிப்படையில் காணப்படுவதாகவும் தெரிவித்தே அரசாங்கம் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் பதவி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் யுத்தக் குற்றச் செயல்கள் விவகாரத்தில் நெகிழ்வுத்தன்மையை பின்பற்றுமாறு ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி , தீர்மானம் சமர்ப்பித்த நாடுகளிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச தீர்மானத்தின் 6ம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் பாரதூரமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வெளிநாட்டு நீதவான்கள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களைக் கொண்ட நீதிமன்ற விசாரணை செயன்முறைமை என்பது ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் முழுக்க முழுக்க உள்ளக விசாரணைப் பொறிமுறைமையின் ஊடாக உள்நாட்டு நீதிமன்றங்கள் விசாரணை நடத்தும் என கூறிய போதிலும், 6ம் பந்தியில் வேறு விடயமே குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உத்தேச தீர்மானத்தின் 4ம் பந்தியில் இலங்கை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு சக்திகள் நிதி உதவிகளை வழங்கக் கூடிய பின்னணி உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட படையதிகாரிகள் பதவிகளில் அமர்த்தப்படுவதனை தவிர்க்குமாறு யோசனையின் 8ம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார சேவை உள்ளிட்ட பல முக்கிய அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் படையதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அவ்வாறான விடயங்களை காண முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மெய்யாகவே சரியான இணக்கப்பாட்டுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் இலங்கைக்கு பகைமை ஏற்படுத்தக் கூடிய தீர்மானத்தின் சரத்துக்களை அரசாங்கம் நீக்குவதற்கு முயற்சி எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, September 27, 2015

ஆப்பிள் சி.இ.ஓ., டிம் குக் - மோடி சந்திப்பு!

Sunday, September 27, 2015
சான்ஜோஸ் : கலிபோர்னியாவில் நுாற்றுக்கணக்கான தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையகம் செயல்படும் சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக்கை சந்தித்து பேசினார்.
 
ஆப்பிள் நிறுவனத்திற்கும், இந்தியாவிற்கும் நல்ல நட்புறவு நீடித்து வருவதாக ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ. டிம் குக் கூறியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டம், ஜி4 நாடுகளின் கூட்டம், ஆப்பிள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் உயரதிகாரிகளின் சந்திப்பு உள்ளிட்ட பணிகளுக்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
ஐ.நா. சபையின் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மோடி, பின் ஜி4 நாடுகளின் மாநாட்டிலும் சிறப்புரையாற்றினார். பின் கூகுள், ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்களின் உயரதிகாரிகளை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
 
சான் ஜோஸ் நகரில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில், அந்நிறுவன சி.இ.ஓ. டிம் குக்கை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக, சந்திப்பிற்கு பிறகு டிம் குக் கூறியுள்ளார்.
 
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, டிம் குக் கூறியதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது, 
 
 ஆப்பிள் நிறுவனத்திற்கும், இந்தியாவிற்கும் நீண்டநாள் நட்பு உள்ளது. எங்களது நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸிற்கு, இத்துறையில் சிறந்துவிளங்க ஊக்கமளித்ததே இந்தியா தான். ஸ்டீவ் ஜாப்ஸ், பலமுறை இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். டிஜிட்டல் இந்தியா தி்ட்டம், இந்தியாவை பல்வேறு துறைகளில் முன்னெடுத்து செல்லும் தி்ட்டமாக உள்ளதாக டிம் குக் கூறியதாக, ஸ்வரூப் கூறியுள்ளார்.

வெளிநாட்டு நிபுணர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் கொண்டுவரவில்லை: ஜீ.எல்.பீரிஸ்!

Sunday, September 27, 2015
வெளிநாட்டு நிபுணர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் கொண்டுவரவில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதவான்கள், வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் விசாரணையாளர்களை அழைத்து வந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், நிபந்தனைகளின் அடிப்படையில் அவை பெற்றுக்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பரணகம ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க, வெளிநாட்டு நிபுணர்களின் தொழில்சார் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அரசாங்கத்தின் தீர்மானகவே காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் வெளிநாட்டு நிபுணர்களின் உதவி வளவாளர்கள் என்ற அடிப்படையிலேயே பெற்றுக்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய நிலைமைமுற்றிலும் மாறுபட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டு நீதிமன்ற விவகாரங்களில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு தலையீடு என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தீர்மானம் ஒர் சர்வதேச சதி வலையாகும் முன்னாள் சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்!

Sunday, September 27, 2015
அமெரிக்காவின் தீர்மானம் ஒர் சர்வதேச சதி வலையாகும் முன்னாள் சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
 
ஜெனீவா அறிக்கைக்கு அமைய இலங்கையில் நிறுவப்பட உள்ள விசேட நீதிமன்றமானது, இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பை தலைகீழாக மாற்றியமைக்கும்.இந்த யோசனைத் திட்டத்தை ஓர் சர்வதேச சதி வலையாகவே பார்க்க வேண்டும்.
 
ஹைபிரைட் என்ற சொல் பயன்படுத்தப்படாவிட்டாலும் வெளிநாட்டு நீதவான்கள் வெளிநாட்டு சட்டத்தரணிகள் விசாரணையாளர்கள் உள்ளடக்கப்படுவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த முறைமையானது காலணித்துவ ஆட்சிக் காலத்திலான நீதிமன்றக் கட்டமைப்பினை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
 
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலையீடு பற்றியும் இரண்டாவது உத்தேச யோசனையில் கூறப்பட்டுள்ளதனால், இந்த யோசனை ஹைபிரைட் நீதிமன்றத்தை விடவும் ஆபத்தானது.
 
போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.
 
எனவே சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய விசாரணை என்ற போர்வையில் இலங்கையை சர்வதேச ரீதியில் சிக்க வைக்கும் சதி வலையில் ஏற்கனவே இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது என தயான் ஜயதிலக்க சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

நியூயோர்க்கில் மைத்திரி - பான் கீ மூன் நேற்று சந்திப்பு!

Sunday, September 27, 2015
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்துள்ளார்..
 
இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகளின் பொது அமர்வுக்கு புறம்பாக நியூயோர்க்கில்  நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதன்போது இலங்கையின் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள், மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே இலங்கையின் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் பான் கீ மூன், மைத்திரிபாலவுடன் தொடர்புக்கொண்டு தேர்தல் குறித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியிருந்தையும் குறிப்பி;டத்தக்கது.
 
மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு உலக நாடுகளிடம் பாப்பரசர் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக செவிமடுத்துள்ளார்.
 
இதுகுறித்த தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வின் ஆரம்ப உரை பாப்பரசர் புனித பிரான்சிஸ் இனால் நிகழ்த்தப்பட்டது. இதன்போது மரண தண்டனையை ரத்துச் செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும்என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் அமைதியாக, ஆழ்ந்து செவிமடுத்துக் கொண்டிருந்ததாக அவரது ஊடகப் பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
 
எனினும் இது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து எதுவித பிரதிபலிப்பையும் காணமுடியவில்லை என்றும் அவரது ஊடகப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Saturday, September 26, 2015

நுவரெலியா வெதமுல்ல மண்சரிவில் ஏழு பேர் பலி!

Saturday, September 26, 2015
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட உட்பட்ட  கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஏழு பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையிலிருந்து மரண பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
மீட்பு பணியாளர்களால் 25.09.2015 அன்று இரவு வரை 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் 26.09.2015 அன்று சனிக்கிழமை காலை 2 வயதுடைய சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த லோகநாயகி (48 வயது), காந்திமதி (23 வயது), புவனா (6 வயது), லட்சுமி (67 வயது), சுபானி (9 வயது), மனோஜ் (4 வயது), ரூபினி (2 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருகால்களும் உடைந்த நிலையில் செல்லையா கணேசன் (வயது 55) என்பவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ் அனர்த்தத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பாதிக்கப்பட்டுள்ளனர்.

25.09.2015 அன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற இந்த பாரிய மண்சரிவில் 9 வீடுகளை கொண்ட லயனும் (தோட்டக்குடியிருப்பு) சேதமடைந்துள்ளன.
அவர்களுக்கான நிவாரண உதவிகளை நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச சபைகள் முன்னெடுத்து வருகின்றன.

அத்தோடு, மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பாரிய மண்மேடு சரிந்துவிழும் ஆபத்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு பணிகளின் போது பூண்டுலோயா மற்றும் கொத்மலை பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பொது மக்கள் ஆகியோர் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை!

Saturday, September 26, 2015
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பதில் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஹர்ஸ டி சில்வாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைத் தூதுவர் டேவிட் டாலிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை மீள அளிப்பது குறித்து பேசப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை உள்ளிட்ட சில காரணங்களினால் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த, ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்திருந்தது.

நிபந்தனைகளுக்கு உட்படுவதாக தெரிவித்து புதிய அரசாங்கம் மீளவும் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஸ புதல்வர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் விமர்சனம் செய்த மைத்திரி குடும்ப உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில்!

Saturday, September 26, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது புதல்வரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபாலவின் புதல்வர் நியூயோர்க்கில் ஜனாதிபதியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் காட்சிகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.உயர்மட்ட இலங்கைகுழுவின் ஒர் உறுப்பினராக தஹாம் பங்கேற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது புதல்வர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் உத்தியோகபூர்வ விஜயங்களில் இணைத்துக்கொள்வதாக தற்போதைய அரசாங்கம் கடுமையாக விமர்சனம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
மஹிந்த ராஜபக்ச காலத்தில் நாமல் ராஜபக்சவின் அரசியல் தலையீடு போன்று மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் தஹம் சிறிசேனவின் தலையீடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது புதல்வர் நாமல் ராஜபக்சவை இராஜதந்திர விவகாரங்களில் உடன் அழைத்துச் சென்றது போன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரியும் தனது புதல்வர் தஹம் சிறிசேனவை மெதுமெதுவாக அரசியலுக்குள் இழுத்து வருகின்றார்.
 
ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கான விஜயத்தின் போது தஹம் சிறிசேனவும் இணைந்து கொண்டிருந்ததுடன், இராஜதந்திர அந்தஸ்துடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்விலும் அவர் கலந்து கொண்டிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது
 
முதல் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எந்தவிதமான இராஜதந்திர அந்தஸ்தும் இல்லாத தஹம் சிறிசேன எவ்வாறு ஐக்கிய நாடுகள் அமர்வில் கலந்துகொள்ள முடியும்? சொந்தப்பணத்தில் தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளாரா என்பன போன்ற கேள்விகளும் சமூக வலைத்தளங்களின் ஊடாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க தீர்மானத்தின் ஊடாக மறைமுகமாக கலப்பு நீதிமன்றம் வலியுறுத்தப்பட்டுள்ளது: தயான் ஜயதிலக்க!

Saturday, September 26, 2015
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச தீர்மானத்தில் மறைமுகமாக கலப்பு நீதிமன்ற விசாரணை வலியுறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டதாக தென்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதவான்கள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை நீதிமன்ற பொறிமுறைமையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டுமென இரண்டாம் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
எனினும், இந்த பரிந்துரையானது இலங்கையின் உள்ளக நீதிமன்ற பொறிமுறையாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையில் முறைமையானது மறைமுகமான கலப்பு நீதிமன்றம் எனவும், குவாசி காலணித்துவ முறைமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய காலணித்துவ ஆட்சியின் பின்னர் இலங்கையில் வெளிநாட்டு உள்நாட்டு நீதவான்களின் கூட்டில் விசாரணைகள் நடத்தப்பட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே உத்தேச தீர்மானம் இலங்கையை காலணித்துவ ஆட்சி நோக்கி நகர்த்துவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கம் நாட்டுக்கு விரோதமாக செயற்படுகின்றமை அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சைபிரிவில் சோ!

Saturday, September 26, 2015
சென்னை: பத்திரிகையாளர் சோ ராமசாமியின், உடல்நிலை மோசமானதை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
 
'துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி, 79; மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு காரணமாக, ஒரு மாதத்திற்கும் மேலாக, சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
நேற்று முன்தினம் இரவு, அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சாதாரண வார்டில் இருந்த அவர், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். 'அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்; எனினும், தீவிர கண்காணிப்பும், சிகிச்சை யும் தொடர்கிறது' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

புழல் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் கைதிகள், பயங்கரவாதிகள் ஆவேசம்!

Saturday, September 26, 2015
சென்னை: சென்னை, புழல் சிறையில், ஜெயிலர் மற்றும் வார்டன்கள் நான்கு பேர் மீது, இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில் கைதானவர்களும், பயங்கரவாதிகள் மூன்று பேரும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்; இரண்டு பேரை சிறை பிடித்தனர்.
 
படுகாயமடைந்த சிறை அதிகாரிகள், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 16 பேர் கைதுகடந்த ஆண்டு ஜூனில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார், 49, கொலை வழக்கில், ராஜா முகமது, அப்துல் வகாப், தமீம் உட்பட, 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களும், ஆந்திர மாநிலம், புத்துாரில்பதுங்கியிருந்த போது, சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்ட பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட, மூன்று பயங்கரவாதிகளும், சென்னை, புழல் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர்.
 
நேற்று மாலை, 6:00 மணிக்கு, ஜெயிலர் இளவரசன், 58, அனைத்து கைதிகளும் அறைக்குள் சென்று விட்டனரா என, சோதனையில் ஈடுபட்டார்; அப்போது, உயர் பாதுகாப்பு அறையில், கைதிகளின் எண்ணிக்கையை சரி பார்க்க உள்ளே சென்றார்.
 
அடுத்த சில நிமிடங்களில், அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, ரோந்து பணியில் இருந்த வார்டன்கள் முத்துமணி, 27, ரவிமோகன்,40, செல்வின் தேவராஜ், 42, ஆகியோர் ஜெயிலரை காப்பாற்ற உள்ளே சென்று கைதிகளை அடித்தனர்.
 
இதனால், ஆத்திரமடைந்த கைதிகள் அவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். கல், உருட்டு கட்டை என, கையில் கிடைத்த பொருட்களால் தாக்கினர். வார்டன் முத்துமணியை, கூர்மையான இரும்பு கம்பியால் குத்தினர். இதுபற்றிய தகவல் அறிந்த மற்ற வார்டன்கள் மற்றும் சிறை அதிகாரிகள் அங்கு சென்றனர்; கைதிகளை சிறைக்குள் தள்ளி, படுகாயம் அடைந்த ஜெயிலர் மற்றும் வார்டன்களை காப்பாற்றி, ஆம்புலன்ஸ் மூலம், சென்னை அரசு ஸ்டான்லி
 
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறைத்துறை டி.ஐ.ஜி.,க்கள் மவுரியா, ராஜேந்திரன் உள்ளிட்ட சிறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மண்டல இணை கமிஷனர் தினகரன் ஆகியோர் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். நிபந்தனைமேலும், தாக்குதலில் ஈடுபட்ட கைதிகள், உதவி ஜெயிலர் குமார், வார்டன் மாரி ஆகியோரை பிணை கைதிகளாக பிடித்து வைத்தனர். 'சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதி பேச்சு நடத்திய பிறகே, இருவரையும் விடுவிப்போம்' என, நிபந்தனை விதித்தனர். இரவு, 9:00 மணிக்கு, புழல் சிறைக்கு சென்ற திரிபாதி, அவர்களிடம் பேச்சு நடத்தியதை அடுத்து, பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.